கோலாலம்பூர், நவ. 13- இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி 12 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு எதிரான சிறப்பு சோதனை நடவடிக்கையில் சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) 3,855 குற்ற அறிக்கைகளை வெளியிட்டது.
இச்சோதனையின் போது தொழில்நுட்ப குற்றங்களுக்காக 1,644 குற்ற அறிக்கைகளும் சாலை வரி இல்லாததற்காக 983 குற்ற அறிக்கைகளும் லைசன்ஸ் இல்லாததற்காக 737 குற்ற அறிக்கைகளும் பதிவு எண் விதிமுறையை மீறியதற்காக 302 குற்ற அறிக்கைகளும் வெளியிடப் பட்டதாக அதன் இயக்குநர் அஸ்ரின் பொர்ஹான் கூறினார்.
இக்காலக்கட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 19,362 மோட்டார் சைக்கிள்கள் சோதனைக்குட்படுத்தப் பட்டன. மோட்டார் சைக்கிளோட்டிகள் புரிந்த பெரும்பாலான குற்றங்கள் தொழில்நுட்பம் சார்ந்தவையாக உள்ளன. புகைப்போக்கிகள், விளக்குகள் மற்றும் இதர பாகங்களை மாற்றியமைத்தது ஆகியவையும் அக்குற்றங்களில் அடங்கும் என்றார் அவர்.
மாநிலத்திலுள்ள 286 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் சாலை போக்குவரத்து இலாகாவின் 325 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களோடு தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம், அரச மலேசிய போலீஸ் படை, நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களும் பங்கேற்றன என்றார் அவர்.
நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 631 மோட்டார் சைக்கிள்கள் சோதனையிடப்பட்டன. அதில் 295 பேருக்கு குற்ற அறிக்கைகள் வெளியிடப் பட்டதோடு ஐந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மெத்தம் பெத்தமின் போதைப் பொருளை உட்கொண்டது சோதனையில் கண்டறியப்பட்ட ஐவரை தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் கைது செய்தது என்று அவர் மேலும் சொன்னார்.


