கோலாலம்பூர், நவ. 13 - கிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கொள்ளையிட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு வியட்நாம் ஆடவர்கள் இங்குள்ள ஜாலான் இம்பியில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.
புக்கிட் அமான் மற்றும் கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த போலீஸ் குழு நேற்றிரவு 11.30 மணியளவில் மேற்கொண்ட ஒப் தெபோக் நடவடிக்கையில் அவர்கள் அனைவரும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது இசா கூறினார்.
ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 17வது மாடியில் உள்ள வீடொன்றை காவல் துறையினர் முற்றுகையிட்ட போது அக்கும்பல் தங்கள் உறுப்பினர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
இந்த முயற்சியின் (கைது) போது போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நான்கு பேரும் வீழ்த்தப்படும் வரை வரை துப்பாக்கிச் சூடு நடந்தது என்று அவர் சம்பவம் நடந்த இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
போலீஸ் அதிகாரிகளை தாக்க சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கத்திகள் மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகள் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ருஸ்டி குறிப்பிட்டார்.
கோலாலம்பூரில் 28 கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் சிலாங்கூரில் 16 கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட 43 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட 44 கொள்ளைச் சம்பவங்களில் அந்த நான்கு பேரும் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
ஆளில்லாத அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளை குறிவைக்கும் இக்கும்பல், வளாகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து கொள்ளையிடுவது வழக்கமாகும் என்றார் அவர்.


