கெய்ரோ, நவ.13 - மடாணி அரசின் கொள்கையின்படி ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், எடுக்கப்படும் நடவடிக்கை வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாம் உறுதியுடன் இருந்தால், முறையான ஊழலை ஒழிப்பதில் தீவிரமாக இருந்தால், அமலாக்கத் துறையினர் தொழில் ரீதியாக தங்கள் வேலையைச் செய்ய அனுமதிப்போம்.
இப்போது அல்லது அடுத்த வாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்தக்கூடாது. நீங்கள் என்னைக் கேட்டால் விசாரணை விரைவுபடுத்தப்பட வேண்டும். அது வெளிப்படையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். ஆனால் எப்போது? அது (அதிகாரிகளின்) ஆற்றலைப் பொறுத்தது என்று அவர் சொன்னார்.
நேற்று, எகிப்து நாட்டிற்கான பயணத்தின் முடிவில் மலேசிய செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்ஏசிசி) சந்தித்ததாகக் கூறப்படும் ஊழலை அம்பலப்படுத்திய நபர் தொடர்பான ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து கேட்டபோது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
பாதுகாப்பு கேட்டு ஊழலை அம்பலப்படுத்திய நபரிடமிருந்து கடிதம் வந்ததா என்று கேட்டதற்கு, இல்லை என்று அன்வார் பதிலளித்தார். அப்படியே கடிதம் கிடைத்தாலும் அதனைத் தாம் எம்.ஏ.சி.சி.யிடம் ஒப்படைக்கப் போவதாக அவர் கூறினார்.
லஞ்ச வழக்குகளில் ஊழலை அம்பலப்படுத்தியவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து கருத்துரைத்த அவர், தெளிவற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடாது என்றார்
என்ன வழக்கு என்று எனக்குத் தெரியவில்லை... அவர்கள் என்ன செய்கிறார்கள் ... அவர்கள் தூய்மையானவராகளாக இருக்கலாம். நல்லவர்களாக இருக்கலாம். ஊழலில் ஈடுபடாமலும் இருக்கலாம். அல்லது சம்பந்தப்பட்டிருக்கலாம். அதை அமலாக்கத் தரப்பிடம் விட்டு விடுங்கள் என்றார் அவர்.
பிரதமர் பதவியைப் பயன்படுத்தி யாருக்கும் பாதுகாப்பை வழங்க முடியாது ஊழலில் ஈடுபடாத நேர்மையான முறையில் தகவல்களை வழங்குபவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். முறையானவர்கள், ஊழலில் ஈடுபடாதவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் எங்கள் கொள்கை என்று அன்வார் குறிப்பிட்டார்.


