கோலாலம்பூர், நவ.13 - கடந்த அக்டோபர் 21ஆம் தேதி முதல் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு 2025ஆம் ஆண்டு விநியோக மசோதா (2025 வரவு செலவுத் திட்டம்) மக்களவையில் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நிதி அமைச்சருமான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி தாக்கல் செய்த இந்த மசோதா அதிக ஆதரவு வாக்குகளுடன் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த மசோதா மீதான செயல் குழு நிலையிலான விவாதம் இன்று முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு 42,100 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய வரவுத் செலவுத் திட்டமாக விளங்குகிறது.
இது மடாணி பொருளாதார கட்டமைப்புடன் விவேக பங்காளித்துவ ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது.
உயர்தர முதலீடுகளை ஈர்ப்பது, வணிக வாய்ப்புகளை உருவாக்குவது, மக்களின் நலனுக்காக திட்டங்களை செயல்படுத்துவது, மக்களின் அத்தியாவசிய பொருள் மற்றும் சேவைகளை வாங்கும் திறன் பாதிக்காத வகையில் இருப்பதை உறுதி செய்வதில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது.


