கோலாலம்பூர், நவ. 13 - கடந்தாண்டு நாடு முழுவதும் 324 வேலையிட
மரணங்கள் பதிவாகியுள்ளதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்
கூறினார்.
அக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த 38,950 வேலையிட விபத்துகளில்
மேற்குறிப்பிட்ட மரண எண்ணிக்கையும் உள்ளடங்கியுள்ளது என்று அவர்
சொன்னார்.
கடந்தாண்டு நிகழ்ந்த வேலையிட விபத்துகளின் விகிதாசாரம் 1,000
தொழிலாளர்களுக்கு 2.46 பேர் என்ற அளவில் இருந்ததை இந்த
எண்ணிக்கை காட்டுகிறது. அதே சமயம் விபத்துகளில் உயிரிழந்தவர்கள்
எண்ணிக்கை 100,000 பேருக்கு 2.05 பேராக இருந்தது.
இருப்பினும் வேலையிட விபத்துகளின் எண்ணிக்கை 1,000 பேருக்கு 2.32
பேராகவும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100,000 பேருக்கு 3.23 பேராகவும்
2021-2025 தேசிய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார பெருந்திட்டத்தில்
வரையறுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அமைச்சு வேலையிட
பாதுகாப்பு மற்றும் சுகாதார இலாகா வாயிலாக தொடர்ந்து மேற்கொண்டு
வருகிறது என்று அவர் சொன்னார்.
அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் மற்றும்
நோய்கள் தொடர்பான விரிவான ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு
2023ஆம் ஆண்டு தேசிய வேலையிட விபத்து மற்றும் நோய் தரவு
அறிக்கை தயாரிக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.


