ஷா ஆலம், நவ. 12- புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையின்
18.6வது கிலோ மீட்டரில் கோத்தா டாமன்சாரா-டாமன்சாரா இடையே மண்
உள்வாங்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த விரைவுச் சாலையின் அவசர
மற்றும் இடது பக்க தடத்தின் ஒரு பகுதி போக்குவரத்துக்கு
மூடப்பட்டுள்ளது.
அந்த பகுதியைக் கடக்கும் போது மிகுந்த கவனப் போக்கை
கடைபிடிக்கும்படி அந்த நெடுஞ்சாலையின் ஒப்பந்த நிறுவனமான பிளஸ்
மலேசியா பெர்ஹாட் வாகனமோட்டிகளைக் கேட்டுக் கொண்டது.
வாகனமோட்டிகள் பிளஸ் செயலியைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தை
திட்டமிடும் அதேவேளையில் சமீபத்திய நிலவரங்களைத் தெரிந்து
கொள்ள பிளஸ்டிரக் செயலியை தொடரும்படி அந்நிறுவனம் கேட்டுக்
கொண்டது.
கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் இன்று காலை பெய்த
கனமழையைத் தொடர்ந்து இந்த மண் உள்வாங்குதல் ஏற்பட்டது. மழையின்
காரணமாக பல இடங்களில் திடீர் வெள்ளமும் ஏற்பட்டது.
இதனிடையே, சிலாங்கூரின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் போக்குவரத்து
நெரிசல் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதால் கிள்ளான் பள்ளத்தாக்கு
மக்களும் சாலையைப் பயன்படுத்வோரும் மிகுந்த கவனப் போக்கை
கடைபிடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


