கோத்தா கினபாலு, நவ. 12- பெட்ரோலை அண்டை நாட்டிற்கு படகின்
மூலம் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை மலேசிய கடல்சார்
அமலாக்க நிறுவனத்தின் (ஏ.பி.எம்.எம்.) கூடாட் பிராந்திய அதிகாரிகள்
வெற்றிகரமாக முறியடித்தனர்.
கடந்த சனிக்கிழமை பித்தாஸ், கராமுந்திங் கிழக்கே 0.01 கடல் மைல்
தொலைவில் அந்த எரிபொருளை ஏற்றிய படகை அதிகாரிகள் தடுத்து
நிறுத்தியதாக கூடாட் கடல்சார் பிராந்திய கமாண்டர் மௌரிஸ்
கிரீன்விலே அபேயாராட்னி கூறினார்.
இரவு 11.50 மணியளவில் அந்த கடல் பகுதியில் ரேந்துப் பணியை
மேற்கொண்டிருந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட படகை நிறுத்தி
சோதனையிட்ட போது அதில் முறையான ஆவணங்கள் இல்லாமல் 25
நீல நிற கலன்களில் 5,000 லிட்டர் பெட்ரோல் ஏற்றப்பட்டிருப்பதைக்
கண்டதாக அவர் தெரிவித்தார்.
இச்சோதனையின் போது அந்த படகில் 35 வயதுடைய உள்நாட்டு
ஆடவரும் பயண ஆவணங்கள் இல்லாத 30 வயது மதிக்கத்தக்க
பிலிப்பினோ ஆடவரும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, தங்களுக்கு கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில்
கூடாட் கடல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர்
சொன்னார். சந்தேக நபர்களின் இரு படகுகள் இருளில் விரைந்து
பயணிப்பதை அவர்கள் கண்டனர். அதிகாரிகளின் வருகையை அறிந்த
அவர்கள் படகை விரைந்து செலுத்தி அங்கிருந்து தப்ப முயன்றனர்.
அப்பகுதியில் தீவிரமாக தேடும் நடவடிக்கையை மேற்கொண்ட அவர்கள்,
கடலோரம் சகதி நிறைந்த பகுதியில் படகொன்று மறைந்திருப்பதைக்
கண்டனர் என அவர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட அந்த படகிலிருந்து 10,000 வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள
பெட்ரோல் கைப்பற்றப்பட்ட வேளையில் பிடிபட்ட நபர்கள் கூடாட்
பிராந்திய ஏபிஎம்எம். விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்
என்றார்.


