பத்து பஹாட், நவ. 11- கார் மற்றும் அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்
சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி
பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம், இங்குள்ள யோங் பெங், ஜாலான்
கங்கார் பாரு பாலோ, 6வது மைலில் நேற்று காலை 10.15 மணியளவில்
நிகழ்ந்தது.
சம்பந்தப்பட்ட நபர் தனது சகாக்களுடன் உயர் சக்தி கொண்ட மோட்டார்
சைக்கிளில் சிகாமாட்டிலிருந்து குளுவாங் நோக்கிச் சென்று கொண்டிருந்த
போது இந்த விபத்து நிகழ்ந்ததாகப் பத்து பஹாட் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி ஷாருள்அனுவார் முஷடாட் அப்துல்லா கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்த போது அந்த சம்பந்தப்பட்ட ஆடவர் செலுத்திய
மோட்டார் சைக்கிள் எதிரே வந்த காருடன் மோதிய வேளையில் பின்னால்
வந்து கொண்டிருந்த அவரது இரு சகாக்களின் மோட்டார் சைக்கிள்கள்
அதனுடன் மோதியது என்று அவர் சொன்னார்.
இந்த விபத்தில் கழுத்து உள்பட உடலின் பல பாகங்களில்
உள்காயங்களுக்கு உள்ளான 64 வயதான அந்த மோட்டார் சைக்கிளோட்டி
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
இந்த விபத்தில் 58 வயதுடைய சக மோட்டார் சைக்கிளோட்டி, 56 வயதான
அவரின் மனைவி மற்றும் 29 வயதான மற்றொரு மோட்டார்
சைக்கிளோட்டி காயங்களுக்குள்ளான வேளையில் கார் ஓட்டுநர்
காயமின்றி உயிர்தப்பினார் என்றார் அவர்.
உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு கவனக்குறைவாகவும் ஆபத்தான
முறையிலும் வாகனத்தைச் செலுத்தியதற்காக 1987ஆம் ஆண்டு சாலை
போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் இந்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் சொன்னார்.


