NATIONAL

நாடு முழுவதும் மேலும் எட்டு வெள்ள நிவாரண மையங்களை நட்மா அமைக்கும்

8 நவம்பர் 2024, 9:42 AM
நாடு முழுவதும் மேலும் எட்டு வெள்ள நிவாரண மையங்களை நட்மா அமைக்கும்

புத்ராஜெயா, நவ. 8 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய மேலும் எட்டு நிரந்தர நிவாரண மையங்களை  நிறுவ அரசு திட்டமிட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நட்மா) தலைமை இயக்குநர்  டத்தோ கைருல் ஷாரில் இட்ரூஸ் தெரிவித்தார்.

ஜோகூர் மாநிலத்தின் கோத்தா திங்கியில்  உள்ள தாமான் கோத்தா ஜெயாவில்  ஒரு மண்டபம் வெற்றிகரமாகப் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இந்த மண்டபம்  கழிப்பறைகள் மற்றும் குளியலறை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட   சுமார் 400 பேருக்கு இங்கு  இடமளிக்க முடியும். இதன் முந்தைய கொள்ளளவு 190 பேராக மட்டுமே இருந்தது என்று அவர் கூறினார்.

இன்று பூலாவ் மெராந்தியில் உள்ள சிறப்பு மலேசிய பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு (ஸ்மார்ட்) தளத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழைக்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் அமர்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கைருல் இதனைத் தெரிவித்தார்.

நிவாரண மையங்களை அமைப்பதற்கு சபா, சரவாக், கிளந்தான், திரெங்கானு, பினாங்கு, ஜோகூர் மற்றும் பேராக் உள்ளிட்ட மாநிலங்களில்  புதிய  இடங்களை நட்மா அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்

இத்திட்டம் இப்போது டெண்டர் கோரும் கட்டத்தில் உள்ளது.  சபா மற்றும் சரவாக்கில் மாநில அரசுகள் இம்மையங்களை நிர்வகிக்கின்றன. மற்ற மாநிலங்களில் பொதுப்பணித் துறை மேற்பார்வை செய்கிறது.

ஒவ்வொரு நிவாரண மையத்தையும் உருவாக்குவதற்கு   சுமார் 50 லட்சம்  வெள்ளி செலவாகும் என மதிப்பிடப்படுகிறது.  இதன் கட்டுமானம் 15 மாதங்கள் வரை ஆகும் என்றார் அவர்.

இந்த நிவாரண மையங்கள் யாவும் பள்ளிகளுக்கு அருகில் கட்டப்படும்.  மாணவர்கள் வெள்ள காலத்திற்கு அப்பால் மாணவர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்த முடியும். இது தவிர, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பள்ளிகளை தற்காலிக தங்குமிடங்களாகப் பயன்படுத்துவதை நிறுத்தும் திட்டத்தின் முதல் கட்டம் இதுவாகும்  என்று கைருல் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.