(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ 8 - சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்) வாயிலாக மாநில அரசு அமல்படுத்தி வரும் வர்த்தக உபகரண உதவித் திட்டம் தங்களின் வர்த்தக விரிவாக்கத்திற்கு வருமான உயர்வுக்கும் பெரிதும் துணை புரிவதாக இத்திட்ட பங்கேற்பாளர்கள் கூறினர்.
இந்த திட்டத்தின் மூலம் கிடைத்த வர்த்தக உபகரணங்கள் தங்களின்
பணிகளை எளிதாக்கியுள்ளதோடு வர்த்தகத்தை அடுத்தக் கட்டத்திற்கு
கொண்டுச் செல்வதற்குரிய வாய்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது என
அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த ஐ-சீட் திட்டத்தின் மூலம் தமக்கு கிடைத்த சட்டைகளில் அச்சிடும்
இயந்திரம் தனது வர்த்தகத்தின் விரிவாக்கத்திற்கு பெரிதும் உதவி
புரிவதாக கிள்ளன், தாமான் செந்தோசாவைச் சேர்ந்த கார்த்திகேசன்
கருப்பையா (வயது 42) கூறினார்.
கடந்த பத்தாண்டுகளாக இந்த வியாபாரத்தில் தாம் ஈடுபட்டு வந்தாலும்
சொந்தமாக இயந்திரங்கள் இல்லாத காரணத்தால் கிடைக்கும் ஆர்டர்களை
வெளியில் பிறரிடம் கொடுத்து அச்சிட்டு வந்ததாக அவர் சொன்னார்.
சொந்த இயந்திரங்கள் இல்லாத காரணத்தால் அதிகமாக உழைத்தாலும்
குறைவான வருமானத்தையே ஈட்ட முடிந்தது. ஐ-சீட் மூலம் சுமார் 8,500
வெள்ளி மதிப்பிலான மூன்று இயந்திங்களை உள்ளடக்கிய செட் எனக்கு
கிடைத்தது.
இந்த இயந்திரம் கிடைத்தப் பின்னர் எனக்கு வாடிக்கையாளர்கள்
எண்ணிக்கை அதிகரித்து வருமானமும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
அதே சமயம் குறுகிய காலத்தில் அதிக வேலைகளையும் செய்ய
முடிகிறது என்றார் அவர்.
இந்த திட்ட அமல்படுத்தியதன் மூலம் தன்னைப் போன்ற சிறு
வணிகர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்து வரும் மாநில அரசுக்கும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு ஆகியோருக்கும் தாம் நன்றி தெரிவித்துக்
கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த ஐ-சீட் திட்டத்தின் வாயிலாக தனது புகைப்படத் தொழிலை மேலும் விரிவான அளவில் மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளதாக காப்பாரைச் சேர்ந்த இல்லத்தரசியான திருமதி தேவிகா பன்னீர் செல்வம் (வயது 32) கூறினார்.
தற்போது 2,500 வெள்ளி மதிப்பிலான கேமரா உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு பிறந்தாள், காது குத்து போன்ற சிறிய வைபவங்களில்
புகைப்படம் எடுக்கும் பணியை தாம் மேற்கொண்டு வருவதாகக் கூறிய
அவர், மாநில அரசின் ஐ-சீட் திட்டத்தின் மூலம் 6,500 வெள்ளி மதிப்பிலான
கேமரா மற்றும் 6,000 வெள்ளி மதிப்பிலான கேமரா மற்றும் ஸ்பின் பூத்
எனப்படும் சூழல் கேமரா தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த புதிய உபகரணங்கள் மூலம் வர்த்தகத்தை விரவுபடுத்தி கூடுதல்
வருமானம் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்று அவர்
தெரிவித்தார்.
ஐ-சீட் மூலம் தமக்கு சுமார் 4,000 வெள்ளி மதிப்புள்ள பேட்டரியில்
இயங்கக்கூடிய ட்ரில், கிரைண்டர், உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய
இரண்டு செட் உபரகணங்கள் தமக்கு கிடைத்ததாக கிள்ளான் தாமான்
செந்தோசாவைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் சந்திரகாந்தம் (வயது 32)
தெரிவித்தார்.
வயரிங் தொழிலில் ஈடுபட்டுள்ள தமக்கு இந்த இந்த உபகரணங்கள்
பெரிதும் உதவியாக இருந்து வருவதாக அவர் சொன்னார். முன்பு மின்சார
கருவிகளைப் பயன்படுத்தி எனது வேலைகளைச் செய்து வந்தேன். மின்
விநியோகம் இல்லாத இடங்களில் பணிகளைச் செய்ய முடியாத சூழல்
நிலவியது.
இனி அந்த பிரச்சனை இருக்காது. எந்த இடத்திலும் பணிகளை தங்கு
தடையின்றி மேற்கொள்ள இயலும். இந்த உபகரணங்களை வழங்கிய உதவிய மாநில அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.


