கோலாலம்பூர், நவ. 7- சிலாங்கூர் கடந்த ஆண்டு ஈ-காமர்ஸ் எனப்படும் மின்-வர்த்தகத் துறையின் மூலம் கிட்டத்தட்ட 40,000 கோடி வெள்ளி மதிப்பிலான பரிவர்த்தனையை பதிவு செய்துள்ளது.
சிலாங்கூர் இ-காமர்ஸ் எக்ஸ்லரேட்டர் 2024 (Selangor Xccelerator 2024 -ECX24) திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் திட்டங்கள் இந்தத் துறையின் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது என்று முதலீட்டு முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
"இ.சி.எக்ஸ்.24" போன்ற திட்டங்கள் சிலாங்கூரில் மின் வணிகத் துறைக்கு உத்வேகம் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (எஸ்.எம்.இ.) மிகவும் போட்டித்தன்மையுடனும் உயரிய நிலையை அடையக்கூடியதாகவும் உயர்த்துகிறது என அவர் சொன்னார்.
அடுத்தாண்டு சிலாங்கூர் இ.சி.எக்ஸ் முன்னெடுப்பு மிக முக்கியமான பங்கை வகிக்கும். கூடுதலாக, இலக்கவியல் பொருளாதாரம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதாசார உயர்வுக்கும் பங்களிக்கும் என்றார் அவர்.
மலேசிய பங்குச் சந்தை ஆணைய ஆடிட்டோரியத்தில் நேற்று நடைபெற்ற இ.சி.எக்ஸ்.24 நிறைவு விழாவில் அவர் இதனைக் கூறினார்.
முன்னதாக, சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (சீடேக்) ஏற்பாடு செய்த சிலாங்கூர் இ.சி.எக்ஸ்.24 வெற்றியாளர்களாக 10 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டன.
வெற்றியாளர்கள் ரொக்கம், வெற்றிக் கிண்ணம், சான்றிதழ்கள் மற்றும் சீனாவின் ஷாங்காயில் உள்ள பைட் டான்ஸ் தலைமையகத்திற்கு வணிகப் பயணத்தை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பினைப் பெறுவார்கள்.


