கோலாலம்பூர், நவ 7- நாட்டில் கைபேசி ஒருங்கமைப்புச் சேவையை
வழங்கி வரும் யு மோபைல் சென். பெர்ஹாட் நிறுவனத்திற்கு நாட்டின்
இரண்டாவது 5ஜி அலைக்கற்றைச் சேவை லைசென்ஸ் வழங்கும்
விஷயத்தில் தகவல் தொடர்பு அமைச்சர் மற்றும் அதன் துணையமைச்சர்
சம்பந்தப்படவில்லை என்று மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
யு மோபைல் நிறுவனம் தேர்வு செய்வது தொடர்பான முடிவை எடுப்பதில்
தனி உரிமத்திற்கான சிறப்பு லைசென்ஸ் நிபந்தனைகள் எதுவும்
மீறப்படவில்லை என்று அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் விளக்கினார்.
இந்த தேர்வு அழகு ராணிப் போட்டி போல் நடத்தப்பட்டது. முக்கியமாக,
இது டெண்டர். நேரடி குத்தகை அல்ல என்று அவர் நாடாளுமன்றத்தில்
இன்று அமைச்சர்கள் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.
தகுதி உள்ள கைபேசி சேவை நடத்துநரை வர்த்தக மதிப்பீடு,
தொழில்நுட்பத் திட்டங்கள், வாடிக்கையாளர் திருப்தி, புகார் எண்ணிக்கை
மற்றும் இதர அடிப்படை வசதிகளை அமல்படுத்துவதில் உள்ள ஆற்றல்
ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு டெண்டர் முறையின் வழி
தேர்ந்தெடுக்கும் உரிமை மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக
ஆணையத்திற்கு (எம்.சி.எம்.சி.) உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
வெளிநாட்டுப் பங்குரிமை 49 விழுக்காட்டிற்கும் மேல் இருக்க க்கூடாது
என்ற நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி
செய்வதற்காக எம்.சி.எம்.சி. ஆய்வினை மேற்கொண்ட நிலையில் தங்கள்
நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீடு 20 விழுக்காடாக குறைக்கப்பட்டு
விட்டத் தகவலை யு மோபைல் நிறுவனம் தெரிவித்தது என்றார் அவர்.
நிறுவனப் பங்குரிமையைப் பொறுத்த வரை, உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டுப் பங்குரிமை தொடர்பான நிபந்தனைகள் எதுவும்
மீறப்படவில்லை. என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் இரண்டாவது 5ஜி அலைக்கற்றையை சரியான நிறுவனத்திற்கு
வெளியிடும் விவகாரத்தில் அரசாங்கம் எம்.சி.எம்.சி, வாயிலாக
தொழில்நுட்ப மற்றும் வர்த்தக ரீதியாக கடுமையான தேர்வு முறையை
கடைபிடித்தது என்று அவர் சொன்னார்.


