கோத்தா பாரு, நவ. 7: கடந்த திங்கட்கிழமை கம்போங் கோத்தா ஜெம்பலில் உள்ள பள்ளி ஒன்றின் பின்புறம் RM165,000 மதிப்புள்ள (92.2 கிலோ எடை) 18,000 கூடா போதைப்பொருள் மாத்திரைகள் வைத்திருந்த ஆடவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இரவு 7.30 மணியளவில் யாரோ ஒருவருக்காக காத்திருந்ததாக நம்பப்படும் 29 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகக் கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமட் தெரிவித்தார்.
சந்தேக நபரை பரிசோதித்த போது,அவரது மோட்டார் சைக்கிளில் வெள்ளை நிற பிளாஸ்டிக் பொட்டலம் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்ததாகவும்,அதில் 18,000 கூடா போதைப்பொருள் மாத்திரைகள் அடங்கிய மூன்று மஞ்சள் பொட்டலம் பிளாஸ்டிக்கிற்குள் இருந்ததாகவும் அவர் கூறினார்.
"1988 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் கீழ் சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் ரிங்கிட் 1,500 ரொக்கத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் என" கிளந்தான் காவல் படைத் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
சந்தேக நபரிடம் போதைப்பொருள் தொடர்பான ஏழு முந்தைய பதிவுகள் இருப்பதாகவும், ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்காக நேற்று தொடங்கி நவம்பர் 11 வரை ஏழு நாட்களுக்கு அந்நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் முகமட் யூசோஃப் கூறினார்.


