கோலாலம்பூர், நவ. 7 - காஜாங் பண்டார் டெக்னோலோஜியில் உள்ள வாடகை அறையில்
இரத்த வெள்ளத்தில் பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு 5 மியான்மார் பிரஜைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மதியம் 1.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பண்டார் டெக்னோலோஜி காஜாங் மற்றும் செமினியின் வெவ்வேறு இடங்களில் அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக காஜாங் காவல்துறை தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
இக்கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கத்தி மற்றும் ஆடைகளை போலீசார் கைப்பற்றியதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து நேற்று அதிகாலை 1.09 மணியளவில் 52 வயதான உள்ளூர் ஆடவரிடமிருந்து எங்களுக்கு புகார் கிடைத்தது. 40 வயதான அப்பெண் இரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி காணப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் சம்பவ இடத்தில் மேற்கொண்ட விசாரணையில் அந்தப் பெண் இறந்தது விட்டது உறுதிசெய்யப்பட்டது. அவரது உடல் முழுவதும் 12 கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டதோடு அந்த வாடகை அறையில் உள்ள ஒரு மெத்தையில் உடல் சுற்றப்பட்டிருந்தது அவர் தெரிவித்தார்.
அதே வீட்டின் மற்றொரு அறையில் வாடகைக்கு தங்கியிருந்த ஒரு நபர் பக்கத்து அறையில் வாக்குவாதத்தையும் பின்னர் பாதிக்கப்பட்டப் பெண் உதவி கோரி கூச்சலிடுவதையும் கேட்டதோடு சந்தேக நபர் ஒருவர் கத்தியுடன் தப்பி ஓடுவதையும் கண்டதாக நஸ்ரோன் கூறினார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் பொறாமை என்று நம்பப்படுகிறது. விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர்கள் அனைவரும் இன்று தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது விசாரணை அதிகாரி முகமது ஹபீஸ் ஹம்சாவை 019-655 6536 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


