கோலாலம்பூர், நவ. 7- இரண்டாவது 5ஜி அலைக்கற்றை அமலாக்க
லைசென்ஸ் யு மோபைல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது தொடர்பான
விளக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் இன்றைய மக்களவைக் கூட்டத்தில்
விவாதிக்கப்படவுள்ளன.
யு மோபைல் நிறுவனத்தின் 48.28 விழுக்காட்டு பங்குகளை வெளிநாட்டு
நிறுவனங்கள் வைத்துள்ள நிலையில் அந்த நிறுவனத்திற்கு லைசென்ஸ்
வழங்க அரசாங்கம் முடிவெடுத்ததற்கான காரணம் குறித்து பாசீர் கூடாங்
தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் ஹசான் அப்துல் கரீம்
தகவல் தொடர்பு அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார் என நாடாளுமன்ற
அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் பினாங்கு சென்டரல் பஸ் முனையத்தில் விரைவு பேருந்து
ஒன்றில் மின் இணைப்பு சாதனத்தைப் பயன்படுத்தி கைபேசியை சார்ஜர்
செய்யும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்ததற்கான
உண்மையான காரணம் குறித்த மெர்போக் தொகுதி பெரிக்கத்தான்
நேஷனல் உறுப்பினர் முகமது நஸ்ரி அபு ஹசான் போக்குவரத்து
அமைச்சரிடம் வினா தொடுப்பார்.
அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தேசிய அணியின்
அடைவு நிலையைக் கருத்தில் கொண்டு நாட்டின் விளையாட்டுத் திறனை
மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து புக்கிட்
குளுவோர் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங்
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரிடம் கேள்யெழுப்புவார்.
கேள்வி பதில் அங்கத்திற்குப் பிறகு 2025 விநியோக மசோதா (வரவு
செலவுத் திட்டம்) மீதான விவாதத்தை முடித்து வைக்கும் அங்கத்தில்
அமைச்சர்கள் பங்கு கொள்வர்.


