புத்ராஜெயா, நவ 7- இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாடு முழுவதும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 31.6 சதவீதம் அதிகரித்து 169,691 பேராகப் பதிவாகியுள்ளது. கடந்தாண்டின் இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 128,911பேராக இருந்தது.
போதைக்கு அடிமையானவர்களில் 162,360 பேர் ஆண்கள் என்றும் எஞ்சிய 7,331 பேர் பெண்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்று தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் (ஏ.ஏ.டி.கே.) தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.
செயற்கை போதைப் பொருள்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள வேளையில் 119,410 நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருந்து வகையின் தொடர்பான புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த செயற்கை போதை மருந்துகள் ஆம்பெடமைன்-வகை பரவச போதை மருந்து பிரிவின் கீழ் வருகின்றன. அவை படிக வடிவில் உள்ள ஷாபு, ஐஸ் மற்றும் கல் போன்ற இரசாயனப் பொருட்களை பதப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன.
மாத்திரை வடிவிலான இந்த போதைப் பொருள்களில் பில் கூடா, எக்ஸ்டசி மற்றும் யாபா ஆகியவை அடங்கும். ஓபியேட் வகை போதை மருந்துகள் பயனீட்டுப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதனை 38,854 பேர் பயன்படுத்துகின்றனர். அதைத் தொடர்ந்து 6,750 பயனீட்டாளர்களுடன் கஞ்சாவும் 2,114 பயனீட்டாளர்களுடன் சைக்கோட்ரோபிக் மாத்திரைகளும் உள்ளன என்று அவர் கூறினார்.
19 முதல் 39 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் அதாவது 98,977 போதைப் பொருள் வழக்குகளில் சிக்கியுள்ளனர் என்று ருஸ்லின் விவாத நிகழ்வொன்றில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து 40 வயதுக்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட 69,937 வழக்குகளும் 13 முதல் 18 வயதுடைய தொடர்புடைய 776 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 12 வயதுக்குட்பட்ட சிறார் தொடர்பாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.


