பெட்டாலிங் ஜெயா, நவ 7- ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் லெபனானில்
அமைதிப் பணிகளை மேற்கொள்வதற்கு மலேசிய பட்டாலியன் படையை
(மல்பாட்) அனுப்பும் மற்றும் பணியமர்த்தும் நடவடிக்கையை மலேசியா
தொடரும்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் இஸ்ரேலியப் படைகள் அங்கு
மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைக்கு
மத்தியிலும் மலேசியாவின் அமைதிக் காப்பு படையினர் அங்கு தொடர்ந்து
தங்கியிருப்பர் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட்
நோர்டின் கூறினார்.
லெபனானில் அமைதிப் பணிகளை மேற்கொள்வதற்கு ஐ.நா.வுடன்
மலேசியா செய்து கொண்ட புரிந்துணர்வின் அடிப்படையில் 12வது மல்பாட்
படை அங்கு அனுப்படும் என்று அவர் தெரிவித்தார்.
உலக அமைதிக்கு பாடுபடும் நாடு என்ற மலேசியாவின் நிலைப்பாட்டைப்
பிரதிபலிப்பதற்கும் நெருக்கடிகளுக்கு அரசதந்திர மற்றம் அமைதி
வழிகளில் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்கும் நாடு எனும்
தோற்றத்தை கட்டிக்காப்பதற்கும் லெபனானில் நமது பங்கேற்பு
அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.
இதன் காரணமாகவே இன்று தொடங்கி எதிர்வரும் நவம்பர் 18ஆம் தேதி வரை
நாம் கட்டங் கட்டமாக மல்பாட் படையினரை பெலனானுக்கு
அனுப்புகிறோம். என்றார் அவர்.
இங்குள்ள சுபாங் அரச மலேசிய ஆகாயப்படைத் தளத்தில் நடைபெற்ற
பன்னிரண்டாவது மல்பாட்-850 படைப் பிரிவின் முதல் குழுவினரை
வழியனுப்பும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக்
குறிப்பிட்டார்.
தென் லெபனானில் நிலைமை சவால்மிக்கதாக உள்ளதை ஒப்புக் கொண்ட
முகமது காலிட், எனினும் அந்த சூழ்நிலைக்கு வீரர்களைத் தயார்படுத்தும்
விதமாக போர்ட்டிக்சனில் உள்ள மல்பாட் கிராமத்தில் அவர்களுக்கு 12
வார காலப் பயிற்சி வழங்கப்பட்டது என்றார்.
இந்த மல்பாட் அமைதிக் காப்பு படையில் 82 அதிகாரிகள் மற்றும் 772
உறுப்பினர்கள் உள்ளிட்ட 854 பேர் இடம் பெற்றுள்ளனர்.


