பட்டர்வொர்த், நவ.7- இங்குள்ள தாமான் பாண்டனில் உள்ள வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு சகோதரர்கள் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் மதியம் 2.00 மணியளவில் அளித்த புகாரின் பேரில் 43 முதல் 53 வயதுடைய அந்த நால்வரும் பட்டர்வொர்த்தின் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாகப் பினாங்கு குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் எஸ்ஏசி ஜைலானி அமிட் கூறினார்.
இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து நான்கு தோட்டாக்களுடன் கூடிய பகுதி தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 9 மி.மீ. தோட்டா உறை ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.
கடந்த ஏப்ரல் மாதம் பெறப்பட்ட சூதாட்டத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் 23,000 வெள்ளி கடனைக் கோருவதற்காக இரு ஆடவர்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் சென்றது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவரை நோக்கி துப்பாக்கியை நீட்டியதோடு அவரை மிரட்டும் விதமாக வீட்டுச் சுவரில் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என்று ஜைலானி பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காவல்துறையில் புகார் அளித்ததாக அவர் கூறினார். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஆறு நாட்களும் இதர இருவர் மூன்று நாட்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் பல்வேறு குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான முந்தையப் பதிவுகள் உள்ளன. இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 307 மற்றும் 506, 1960ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் 8வது பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.


