குவாந்தான், நவ. 6 - காப்புறுதி முகவர் மற்றும் போலீஸ் அதிகாரி எனக்
கூறிக்கொண்ட மோசடிக் கும்பலின் வலையில் மூதாட்டி ஒருவர் சிக்கி
தனது சேமிப்புத் தொகையைன 274,000 வெள்ளியை இழந்தார்.
காய்கறி வியாபாரியான அந்த 68 வயது மூதாட்டி கடந்த செப்டம்பர்
மாதம் 28ஆம் தேதி சந்தேக நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பை
பெற்றதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா
ஓத்மான் கூறினார்.
அம்மாதுவின் பெயரில் காப்புறுதி கோரிக்கையைத் தாங்கள்
பெற்றுள்ளதாக அந்த சந்தேகப் பேர்வழி கூறியுள்ளார். பின்னர் அந்த
அழைப்பு போலீஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்ட மற்றொரு நபருக்கு
மாற்றப்பட்டது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக
குற்றஞ்சாட்டிய அந்நபர், விசாரணைக்காக வங்கிக் கணக்கின்
விபரங்களைத் தரும்படி அம்மூதாட்டியை மிரட்டியுள்ளார்.
அந்த மூதாட்டி சந்தேகத்தை எழுப்பியபோதெல்லாம் தொலைபேசி
இணைப்பு மற்ற ‘அதிகாரிகளுக்கு‘ மாற்றப்பட்டுள்ளது. இறுதியாக அரசுத்
தரப்பு துணை வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்ட நபர், அந்த மாதுவுக்கு
எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மிரட்டியுள்ளார் என
யாஹ்யா தெரிவித்தார்.
கைது ஆணையை ஒத்தி வைப்பதற்கும் நிதி தொடர்பான விசாரணையை
மேற்கொள்வதற்கும் ஏதுவாக தாபோங் ஹாஜி, ஏ.எஸ்.பி. மற்றும் வங்கி
கணக்கிலுள்ள பணத்தை வேறு வங்கி கணக்கிற்கு மாற்றும்படி சந்தேக
நபர் அந்த மூதாட்டியை நிர்பந்தித்துள்ளார் என்று அவர் அறிக்கை ஒன்றில்
கூறினார்.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அந்த மூதாட்டியைத் தொடர்பு கொண்ட சந்தேக நபர் வங்கி ஏடிஎம் அட்டையை மாற்றும்படியும் புதிய தொலைபேசி எண்ணை பதிவு செய்யும்படியும் பணித்துள்ளார். அதன் பின்னர் ஜாமீன் நோக்கத்திற்காக சேமிப்புத் தொகையான 237,000 வெள்ளியை மூன்றாம் தரப்பின் வங்கிக் கணக்கிற்கும் மாற்றும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த மூதாட்டியும் கடந்த மாதம் 2 முதல் 10ஆம் தேதி வரை 32 பரிவர்த்தனைகள் மூலம் 14 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு தனது சேமிப்பை மாற்றியுள்ளார் என அவர் சொன்னார்.
சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் குறிப்பாக, பணத்தை
வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றுவது மற்றும் தனிப்பட்ட தகவல்களை
கோரும் அழைப்புகள் குறித்து விழிப்புடன் இருக்கும்படி பொது மக்களை
அவர் கேட்டுக் கொண்டார்.


