NATIONAL

கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பணிகள் ஜனவரி மாதம் தொடங்கும்

4 நவம்பர் 2024, 10:04 AM
கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பணிகள் ஜனவரி மாதம் தொடங்கும்

கோலாலம்பூர், நவ. 4 - போக்குவரத்து நெரிசலை நிவர்த்தி செய்யும் நோக்கில் கோலாலம்பூர்-காராக்  விரைவுச் சாலையை விரிவுபடுத்தும் திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படும் என மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு  முன் ஒப்பந்த நிறுவனம்  திட்ட வடிவமைப்பை இறுதி செய்து வருகிறது என்று துணைப் பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் தெரிவித்தார்.

சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட பங்குதாரர்களின் மாற்றமா இந்த தாமதத்திற்கான காரணமாகும்.  ஒப்பந்தத்தின்படி, இந்த நெடுஞ்சாலையின் விரிவாக்கத்திற்கான கட்டுமான காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். இது 2029ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

மக்களவையில் இன்று குவாந்தான் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் வான் ரசாலி வான் நோர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு  பதிலளித்தார்.

கே.எல்.கே.  விரைவுச் சாலையின் ஒப்பந்ததாரரான ஏ.எப்.ஏ. பிரைம் பெர்ஹாட் மூலம் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும். 45.3 கிலோ மீட்டர்  தூரத்தை உள்ளடக்கிய இந்த விரிவாக்கப் பணிக்கு 210 கோடி வெள்ளி செலவாகும்  என்று அஹ்மட் மேலும் கூறினார்.

கோம்பாக் டோல் பிளாசா முதல் பெந்தோங்  வரையிலான  பிரிவு 1 விரிவாக்கப் பணியில் கூடுதலாக ஒரு தடம் சேர்க்கப்பட்டு  (கோம்பாக் டோல் பிளாசா முதல் கெந்திங் செம்பா வரை) நான்கு தடங்களாக சாலை விரிவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

கெந்திங் செம்பா முதல் பெந்தோங் வரையிலான இரண்டாம் கட்டப் பணியின்போது அப்பகுதியிலுள்ள இரண்டு தடங்கள் மூன்று தடங்களாக விரிவுபடுத்தப்படும்.

தற்போதுள்ள சுரங்கப்பாதையை ஒட்டி, கிழக்கு நோக்கிச் செல்லும் புதிய இருவழிச் சுரங்கப்பாதையை நிர்மாணிப்பதும் பணியில் அடங்கும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.