கோலாலம்பூர், நவ. 4 - இயற்கை எரிவாயுவைக் கொண்டு இயங்கும்
வாகனங்களை (என்.ஜி.வி.) பதிவு செய்ய வரும் 2025ஆம் ஆண்டு ஜூலை
மாதம் முதல் தேதி தொடங்கி அனுமதி கிடையாது என்று போக்குவரத்து
அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
பொது மக்கள் குறிப்பாக என்.ஜி.வி. மூலம் இயங்கும் வாகனங்களைப்
பயன்படுத்துவோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமைச்சரவை
கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி இந்த முடிவை எடுத்ததாக அவர்
சொன்னார்.
என்.ஜி.வி. பயன்பாட்டிற்காக வாகனங்களை மாற்றியமைக்கும் மற்றும்
அதற்கான உபரணங்களை பொருத்தும் பணிகள் கடந்த 1995 முதல் 2004
வரை அதிகம் மேற்கொள்ளப்பட்டதை தரவுகள் காட்டுவதாக அவர்
தெரிவித்தார்.
வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள என்.ஜி.வி. எரிவாயு கலன்களின் ஆயுள்
முடிவடையும் கட்டத்தில் உள்ளதோடு அவை மாற்ற வேண்டிய
நிலையில் உள்ளதை இந்த காலக்கட்டம் உணர்த்துகிறது.
வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் எரிவாயு கலன்களின் ஆயுள்காலம் 15 ஆண்டுகள் மட்டுமே. ஆகவே அவற்றை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லாவிடில் அதன் உபரணங்கள் செயலிழந்து விபத்து, மரணம் அல்லது சொத்துகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது என்று அவர் சொன்னார்.
இன்று தலைநகரில் நடைபெற்ற நாட்டில் என்.ஜி.வி. பயன்பாடு தொடர்பான கொள்கையை அறிவிக்கும் செய்தியாளர் கூட்டத்தில் லோக் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தவிர, சில வாகனமோட்டிகள் சமையல் எரிவாயும் கலன்களைப்
பயன்படுத்துவதற்கு ஏதுவாக தங்கள் வாகனங்களை மாற்றியமைத்துள்ளத்தாக க் கூறிய அவர், இதனால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதோடு இதற்கு முன்னர் வெடிச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என்றார்.


