NATIONAL

பாலஸ்தீன அத்துமீறல் - இஸ்ரேலின் ஐ.நா. உறுப்பியத்தைப் பறிக்க மலேசியா பரிந்துரை

4 நவம்பர் 2024, 6:19 AM
பாலஸ்தீன அத்துமீறல் - இஸ்ரேலின் ஐ.நா. உறுப்பியத்தைப் பறிக்க மலேசியா பரிந்துரை

கோலாலம்பூர், நவ. 4 - பாலஸ்தீனம் தொடர்பான சட்டங்கள், விதிகள் மற்றும் தீர்மானங்களை இஸ்ரேல் தொடர்ந்து மீறும் பட்சத்தில் அந்நாட்டை ஐ.நா. உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கும் பரிந்துரை அடங்கிய ஐ.நா. பொதுப் பேரவை நகல் தீர்மானத்தை மலேசியா வரைந்து வருகிறது.

அந்த நகல் தீர்மானம் தற்பொது விவாத நிலையில் உள்ளதோடு அது அங்கீகாரத்திற்காக ஐ.நா. பொதுப் பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஐ.நா.வின் செயல்பாடுகள் மற்றும் நிலையை அனுமதிக்கும் இஸ்ரேலின் கடமை குறித்து அனைத்துலக நீதிமன்றத்திடம் கருத்தைக் கோரும் ஐ.நா. பொதுப் பேரேவையின் நகல் தீர்மானத்தை தயாரிக்கும் குழுவில் மலேசியா கடந்த மாதம் 31ஆம் தேதி இணைந்தது.

இந்த தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டவுடன் அது கல்வி, சுகாதாரம் மற்றும் மனிதாபிமான உதவி போன்ற அத்தியாவசிய சேவைகளை வழஙகுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு சட்ட அடிப்படையாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் காஸா, மேற்கு கரை, ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள 60 லட்சம் அகதிகள் பயனடைவர் என்று அன்வார் தெரிவித்தார்.

பாலஸ்தீன மக்களுக்கு அனைத்துலக உதவிகளை வழங்குவதில் ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி நிறுவனம் உயிர்நாடியாக விளங்கி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பாலஸ்தீனத்தில் அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி நிறுவனம் ஆற்றி வரும் பங்களிப்பை மலேசியா முழுமையாக ஆதரிக்கிறது. மேலும், உதவி, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் அது வலியுறுத்துகிறது என்று அவர் சொன்னார்.

காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலையைத் தொடக்கி ஓராண்டு கடந்து விட்டதாகக் கூறிய அன்வார், நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி அந்நாட்டில் 16,500 சிறார்கள் உள்பட 43,204 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.