NATIONAL

சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் இயக்கத்தையொட்டி சுற்றுலாத் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு

4 நவம்பர் 2024, 4:30 AM
சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் இயக்கத்தையொட்டி சுற்றுலாத் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு

சிப்பாங், நவ. 4 - சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டையொட்டி அடுத்தாண்டு பட்ஜெட்டில் சுற்றுலாத் துறைக்கான நிதியை அதிகரிக்க மாநில அரசு உத்தேசித்துள்ளது.

அடுத்த ஆண்டிற்கான சுற்றுலாப் பிரச்சாரத்திற்குத் தயாராகும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த இந்த ஆண்டு மொத்தம் 53 லட்சம் வெள்ளி இந்தத் துறைக்கு ஒதுக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

எங்களிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவற்றை 2025ஆம் ஆண்டிற்கான  சிலாங்கூர் பட்ஜெட்டில் அறிவிப்பேன். குறிப்பாக சுற்றுப் பயணிகளுக்கான  கவர்ச்சிகரமான சுற்றுலா தொகுப்புகளும் அதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

முந்தைய பட்ஜெட்டில் நாங்கள் சுற்றுலாத் துறைக்கு  53 லட்சம் வெள்ளியை ஒதுக்கினோம். அந்தத் தொகையை அடுத்தாண்டு நாங்கள் அதிகரிக்கவிருக்கிறோம்  என்று தெரிவித்தார்.

மலேசிய மோட்டோ ஜி.பி. நிகழ்வை முன்னிட்டு நேற்று இங்குள்ள  2024 சிலாங்கூர் சுற்றுலா பெவிலியனுக்கு வருகை  மேற்கொண்டு சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டு சின்னத்தை  அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்நிகழ்வில் எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார்  கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி  ஷியாபொல்யாசன் மாட் யூசோப் மற்றும் டூரிசம் சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ருல் ஷா முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் நவீன சுற்றுலா அனுபவங்களை மட்டுமின்றி, பலதரப்பட்ட அழகிய இடங்களை காண்பதற்குரிய வாய்ப்பினையும் வழங்குகிறது என்று அமிருடின் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டு சிலாங்கூர் வருகை தாருங்கள் இயக்கத்தின் வழி  80 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை மாநில அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.