கோலாலம்பூர், நவ. 4- இணைய இணைப்புச் சேவையை மேம்படுத்துவது
மற்றும் இளையோருக்கான மோட்டார் வாகன விளையாட்டுகளை
ஊக்குவிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இன்றைய மக்களவைக்
கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இணைய இணைப்பை மேம்படுத்துவதற்கு அடையாளம் காணப்பட்ட
இடங்களின் பட்டியல் மற்றும் இணைய அடைவு நிலைப் பிரச்சனைக்குத்
தீர்வு காண்பதற்கு துணைக்கோளம் அல்லது மின் கோபுரங்கள் போன்ற
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பில் ஜூலாவ்
உறுப்பினர் டத்தோ லேரி சூன் லோரி வேய் சியேன் தகவல் தொடர்பு
அமைச்சரிடம் வினவுவார் என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில்
வெளியிடப்பட்டுள்ள இன்றைய கூட்ட நிகழ்ச்சி நிரலில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் மோட்டார் வாகன பந்தயங்களை
ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் குறித்தும் மோட்டார்
வாகனப் பந்தயத் திடலை அமைப்பதற்கான ஒதுக்கீடுகள் குறித்தும்
அலோர்ஸ்டார் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் அஃனான்
ஹமிமி தாய்ப் அஸாமுடின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை
அமைச்சரிடம் வினா தொடுப்பார்.
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் நிலவி வரும் வாகனப்
போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பதற்கான அரசாங்கத்தின்
நடவடிக்கைகள் மற்றும் கோலாலம்பூரையும் கிழக்குக் கரை
மாநிலங்களையும இணைக்கும் மாற்றுத் தடத்தை அமைப்பதற்கான
அரசாங்கத்தின் சாத்தியம் குறித்தும் குவாந்தான் தொகுதி பெரிக்கத்தான்
நேஷனல் உறுப்பினர் வான் ரசாலி வான் நோர் போக்குவரத்து
அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார்.
கேள்வி நேரத்திற்குப் பிறகு மக்களவைக் கூட்டத்தின் ஏழாவது நாளான
இன்று 2025ஆம் ஆண்டு விநியோக மசோதா மீதான விவாதம் தொடரும்.


