கோத்தா பாரு, அக். 31- பொது நடவடிக்கை படையின் (பி.ஜி.ஏ.) தென்கிழக்குப் பிரிவு பாசீர் மாஸ், போக் டிர் பகுதியிலுள்ள சட்டவிரோதத் தளத்தில் நேற்று மேற்கொண்ட நடவடிக்கையில் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 55,100 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு ரகங்களிலான செருப்புகள் மற்றும் காலணிகளை பறிமுதல் செய்யப்பட்டன.
நள்ளிரவு 12.30 மணியளவில் நடத்தப்பட்ட இச்சோதனையில் 29 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டதாக பிஜிஏ தென்கிழக்கு படைப்பிரிவின் கமாண்டர் டத்தோ நிக் ரோஸ் அஸான் நிக் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
கைதான அந்த இளைஞர் தாய்லாந்திலிருந்து உள்ளூர் சந்தைக்கு காலணிகள் மற்றும் செருப்புகளை சட்டவிரோதமாக கொண்டு வந்தவர் என நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
இந்நடவடிக்கையில் 710 ஜோடி செருப்புகள் மற்றும் 196 காலணிகள் அடங்கிய பெட்டிகள் மற்றும் புரோட்டான் சாகா காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் 1967ஆம் ஆண்டு சுங்கத்துறைச் சட்டத்தின் பிரிவு 135 (1)(டி) பிரிவின் கீழ் மேல் நடவடிக்கைக்காக ஜெராம் பெர்டா, கோம்டாக் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.








