ஷா ஆலம், அக். 30 - இம்மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற ஜெலாஜா ஜாப்கேர் சிறப்பு வேலை வாய்ப்புச் சந்தையில் நடைபெற்ற நேர்காணலில் பங்கு கொண்ட 40 மாற்றுத்திறனாளிகளில் 18 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒன்பது பேர் கற்றல் குறைபாடுள்ளவர்கள், ஐந்து பேர் உடல் ஊனமுற்றவர்கள், மூன்று காதுகேளாதவர்கள். எஞ்சியோர் இதர பல குறைபாடுகள் உள்ளவர்கள் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கூறினார்.
நேற்று 40 மாற்றுத் திறனாளிகள் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்தனர். அவர்களில் 18 பேர் பல்வேறு துறைகளில் வேலைகளைப் பெற்றனர். கூடுதலாக, பூர்வக் குடியினர் மற்றும் முன்னாள் கைதி ஒருவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
வேலைவாய்ப்பை பெறுவதில் வாய்ப்பு குறைந்த தரப்பினருக்கு இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. வேலை தேடும் போது மற்றும் முழு உடல் திறன் கொண்ட நபர்களுடன் போட்டியிடும் போது அவர்கள் சங்கடத்தை உணர்வதைக் காண நாங்கள் விரும்பவில்லை என்று அவர் கூறினார் .
மேலும் இந்த தொடக்க நிகழ்ச்சியின் மூலம் 167 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது, மேலும் 253 பேர் இரண்டாவது நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனனர் என்று பாப்பாராய்டு சொன்னார்.








