ஷா ஆலம், அக் 30- தீபாவளியை முன்னிட்டு இன்று ஐந்து இடங்களில் பிரத்தியேக ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையை மாநில அரசு சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) வாயிலாக நடத்துகிறது.
இந்த விற்பனை சுங்கை பாஞ்சாங், டெங்கில், ரவாங், புக்கிட் காசிங், புக்கிட் மெலாவத்தி ஆகிய தொகுதிகளில் காலை 10.00 மணி தொடங்கி நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும். இந்த மலிவு விற்பனை நடைபெறும் இடங்களின் பட்டியல் கீழே விளக்கப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் மேலும் ஏஹ்சான் செகி ஃப்ரெஷ் கிளைகளை திறக்கவும் பி.கே.பி.எஸ். திட்டமிட்டுள்ளது. இந்த பேரங்காடியின் முதலாவது கிளை பெர்ணம் ஜெயா, பாகான் நக்கோடா ஓமாரில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.








