ஷா ஆலம், அக் 29 - கடந்த 2020 முதல் ஐந்து ஆண்டு காலத்தில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஏமாற்றப்பட்ட 707 மலேசியர்களை அரசாங்கம் வெற்றிகரமாகக் காப்பாற்றியுள்ளது.
ஏமாற்றுக் கும்பலின் வலையில் சிக்கிய 906 மலேசியர்களில் அவர்கள் ஒரு பகுதியினர் என்றும் மீதமுள்ள 199 பேர் தேடப்பட்டு வருவதாகவும் துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ முகமது ஆலமின் கூறினார்.
உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், காவல்துறை மற்றும் தனிப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை இந்த தரவுகள் மற்றும் எண்ணிக்கைகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன என்று அவர் சொன்னார்.
"வேலை வாய்ப்பு மோசடி கும்பல்" என்று அழைக்கப்படும் இந்த ஏமாற்றுச் செயல் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தகையச் சம்பவங்கள் தொடர்பான புகார்களை தொகுதி சேவை அலுவலகங்களிலிருந்து அமைச்சு அடிக்கடி பெறுகிறது" என்று அவர் மக்களவையில் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு மற்றும் இணைய மோசடியில் ஈடுபட்ட மலேசியர்களின் எண்ணிக்கை குறித்து புருவாஸ் தொகுதி ஹராப்பான் உறுப்பினர் டத்தோ ங்கே கூ ஹாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கிடையில், வேலைவாய்ப்பு மோசடி கும்பல்கள் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிக்க சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட முன்னெடுப்புகளை அரசாங்கம் பரிசீலிக்கிறது என்று முகமது மேலும் கூறினார்.
அறிவுக்கு பொருந்தாத அளவுக்கு அதிக சம்பளம் தருவதாக உறுதியளிக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்பி எளிதில் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் சொன்னார்.


