கோலாலம்பூர், அக். 29- ரோன்95 பெட்ரோலுக்கான இலக்கு மானியத்
திட்டம் அடுத்தாண்டு மத்தியில் அமலுக்கு வரவுள்ள நிலையில்,
நாட்டிலுள்ள 85 விழுக்காட்டு மக்களின் நலனை அரசாங்கம் தொடர்ந்து
பாதுகாத்து வரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.
டி15 எனப்படும் பெரும் செல்வந்தர்கள் பிரிவினரும் வெளிநாட்டினரும்
மட்டுமே மானியம் இல்லாத சந்தை விலையில் எரிபொருளை
வாங்குவதை உறுதி செய்யும் அரசின் நடவடிக்கை நியாயமான ஒன்றே
என அவர் சொன்னார்.
இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் இலக்கு மானியம் 85
விழுக்காட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதாகும். டி15
தரப்பினருக்காக போராடுவது போல் செயல்படக்கூடாது என்று
எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு அவர்
நினைவுறுத்தினார்.
பெரும் பணக்காரர்களுக்கும் சமுதாயத்தின் உயர்மட்டத்தில்
உள்ளவர்களுக்கும் சந்தை விலையை நிர்ணயிப்பது நியாயமான ஒன்றே
என மக்களவையில் இன்று கோத்தா மலாக்கா ஹராப்பான் உறுப்பினர் கூ
போய் தியோங்கின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரோன்95 பெட்ரோலுக்கான மானியத் திட்டத்தில் டி15 என்பதற்கான
வரையறை என்ன என்பதை அறிய விரும்புவதாகக் கூ முன்னதாக
அவையில் கூறியிருந்தார்.


