கோலாலம்பூர், அக். 29 - அரசாங்கச் சொத்துகள் மற்றும் பொது மக்களின்
நலன் காக்கப்படுவதை உறுதி செய்ய 1960ஆம் ஆண்டு (ஏபிடி) நில
கையகப்படுத்துதல் சட்டத்தில் (சட்டம் 486) திருத்தம் செய்ய அரசாஙகம்
உத்தேசித்துள்ளது.
என்கிளேவ் டூத்தா நில உரிமை கோரல் விவகாரத்தைத் தொடர்ந்து
அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுக்கவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த சட்ட மசோதாவை வரையும் பணியில் சட்டத் துறை தலைவர்
அலுவலகம் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் இப்பணி முற்றுப்
பெற்றவுடன் அமைச்சரவை அந்த சட்ட வரைவை இறுதி செய்யும் என்றும்
அவர் சொன்னார்.
சட்டங்கள் கடுமையாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை சட்டத்துறைத்
தலைவர் அலுவலகம் தற்போது மேற்கொண்டு வருவதை நாம்
காண்கிறோம். பொது மக்களின் நலனை நாம் பலி கொடுக்க முடியாது .
இந்த விவகாரத்தில் நாம் சமரசம் செய்து கொண்டால் அனைத்து
நிலங்களும் குறிப்பாக, நகரங்களில் உள்ள மலாய்க்காரர்களுக்குச்
சொந்தமான நிலங்கள் யாவும் அம்பலத்திற்கு வரும் சூழல் ஏற்படும்
என்றார் அவர்.
மக்களவையில் இன்று அமைச்சர்கள் கேள்வி நேரத்தின் போது அன்வார்
இவ்வாறு தெரிவித்தார். தலைநகர், ஜாலான் டூத்தாவிலுள்ள 263.272 ஏக்கர்
நிலத்தை செமெந்தான் எஸ்டேட் சென். பெர்ஹாட் நிறுவனத்திடம்
ஒப்படைக்கும்படி உயர் நீதிமன்றம் அளித்து தீர்ப்பைத் தொடர்ந்து
என்கிளவ் டூத்தா விவகாரத்திற்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்துள்ள
நடவடிக்கைகள் குறித்து கோத்தா பாரு தொகுதி பெரிக்கத்தான் நேஷனல்
உறுப்பினர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் கேள்வியெழுப்பியிருந்தார்.


