கோலாலம்பூர், அக். 29 - அடுத்த மாத தொடக்கத்தில் தொடங்கும் என
எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள உள்துறை
அமைச்சின் கீழுள்ள மூன்று துறைகளைச் சேர்ந்த 66,042 பணியாளர்கள்
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் அரச மலேசிய போலீஸ் படை, ரேலா எனப்படும்
மலேசிய தன்னார்வலர் துறை மற்றும் மலேசிய கடல்சார் அமலாக்க
நிறுவனம் (ஏ.பி.எம்.எம்.) ஆகிய மூன்று அமைப்புகளைச் சேர்ந்தவர்களாவர்
என்று உள்துறை அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
போலீஸ் படையைச் சேர்ந்த 17,216 உறுப்பினர்களும் 47,100 ரேலா
உறுப்பினர்களும் 1,726 ஏ.பி.எம்.எம். உறுப்பினர்களும் அந்த இயற்கைப்
பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர
10,540 தளவாடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று அந்த
அறிக்கை குறிப்பிட்டது.
பேரிடரில் சிக்கியவர்களை இட மாற்றம் செய்வது, பேரிடர் பகுதிகளில்
பாதுகாப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது, பேரிடர்
அபாயம் உள்ள இடங்களை கண்காணிப்பது, தற்காலிக நிவாரண
மையங்களை நிர்வகிப்பது, விநியோக மையங்களில் பணியாற்றுவது
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட
பணிகளை அவர்கள் மேற்கொள்வர்.
இது தவிர, அரச மலேசிய போலீஸ் படை பேரிடர் நடவடிக்கைக்கான
தளபத்தியமாக செயல்படும் எனவும் அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவ மழை காரணமாக பலத்த காற்றுடன்
கூடிய கன மழை பெய்வதற்கும் இதனால் பல பகுதிகளில் வெள்ளம்
ஏற்படுவதற்கும் சாத்தியம் உள்ளது.
ஆகவே, வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ள பகுதிகளில் வசிப்போர்
எந்நேரமும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதோடு
விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழ்வதைத் தவிர்க்க விரைந்து
செயல்படவும் வேண்டும் என உள்துறை அமைச்சு வலியுறுத்தியது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவது மற்றும் மீட்பது
போன்ற பணிகளை எளிதாக மேற்கொள்வதற்கு ஏதுவாக அதிகாரிகள்
வழங்கும் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றி நடக்கும்படியும்
பொது மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.


