NATIONAL

நான்கு மாதங்களில் 900 குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுபட மாநில அரசு உதவி - பாப்பாராய்டு

29 அக்டோபர் 2024, 1:43 AM
நான்கு மாதங்களில் 900 குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுபட மாநில அரசு உதவி - பாப்பாராய்டு

ஷா ஆலம், அக். 29 - இவ்வாண்டு ஜூலை மாதம் தொடங்கி இம்மாதம்

நடுப்பகுதி வரையிலான காலக்கட்டத்தில் மாநிலத்திலுள்ள 1,024 பரம

ஏழை குடும்பங்களில் 900 குடும்பங்கள் அந்த பிரிவிலிருந்து விடுபட

மாநில அரசு உதவியுள்ளது.

பிங்காஸ் எனப்படும் மக்கள் நல்வாழ்வு உதவித் திட்டம், சமூக நலத்

துறையின் உதவித் திட்டங்கள் மற்றும் சிலாங்கூர் ஸக்கத் வாரியத்தின்

உதவிகள் உள்பட மாநில அரசு அமல்படுத்திய பல்வேறு திட்டங்கள்

மூலம் இந்த வெற்றி சாத்தியமானதாக மனித வளம் மற்றும் வறுமை

ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

கடந்த ஜூலை மாதம் மாநிலத்தில் 1,024 குடும்பங்கள் மிக வறிய நிலைப்

பிரிவில் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த நான்கு மாதங்களில் அந்த

எண்ணிக்கை 124 குடும்பங்களாகக் குறைக்கப்பட்டு விட்டது. இதன் வழி 900

குடும்பங்கள் பரம ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டுள்ளன என்று அவர்

தெரிவித்தார்.

மிக வறிய நிலை முற்றாக துடைத்தொழிக்கப்பட வேண்டும். வறுமை

நிலையிலிருந்து அப்பிரிவினரை மீட்க அனைத்து தரப்பினரின்

ஒத்துழைப்பும் நமக்கு தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.

நேற்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசின் பிரத்தியேக

கார்னிவல் ஜோப்கேர் வேலை வாய்ப்புச் சந்தை நிகழ்வில்

செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பரம ஏழ்மையை ஒழிக்கும் நமது இலக்கு கடந்த ஜூலை மாதம் முழுமை

பெற்றது. எனினும், மரணம், திடீர் வேலை இழப்பு போன்ற காரணங்களால்

புதியவர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவதற்கான சாத்தியம் உள்ளது

என அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு தரப்பினர் மற்றும் அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் கடந்த

ஜூலை மாதத்திற்குள் மிக வறிய நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க

மாநில அரசு முன்னதாக இலக்கு நிர்ணயித்திருந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.