NATIONAL

ரொட்டி சானாய் கடையில் பன்றித் தலையை வைத்த இரு ஆடவர்கள் கைது

28 அக்டோபர் 2024, 9:45 AM
ரொட்டி சானாய் கடையில் பன்றித் தலையை வைத்த இரு ஆடவர்கள் கைது

கோலாலம்பூர், அக். 28 - இங்குள்ள பண்டார் டெக்னாலோஜி காஜாங்கில் உள்ள ரொட்டி சானாய்  விற்கும் கடையில் கடந்த  அக்டோபர் 11ஆம் தேதி பன்றியின் தலையை வைத்த சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக இருவரை போலீசார்  கைது செய்துள்ளனர்.

முப்பத்தைந்து  மற்றும் 51 வயதுடைய அவ்விரு உள்ளூர் ஆடவர்களும் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி  கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் கடையின் உரிமையாளரான 18 வயது இளைஞரிடமிருந்து தாங்கள்  புகாரைப்  பெற்றதாக அவர் சொன்னார்.

கருப்பு மற்றும் சிவப்பு சட்டை மற்றும் கவசத் தொப்பி அணிந்த அடையாளம் தெரியாத  இரண்டு நபர்கள் தனது கடைக்குள் நுழைந்ததைச் சித்தரிக்கும் காட்சிகள் தனது கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை தாம் கண்டதாகக் கடை உரிமையாளர் தனது  புகாரில் கூறியுள்ளார் என நஸ்ரோன் சொன்னார்.

பின்னர் அவர்கள் புகார்தாரருக்கு சொந்தமான கடையின் சமையல்கூடம் மற்றும் ரொட்டி சானாய் சுடும்  அடுப்பில் பன்றியின் தலையை வைத்தனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான  வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்றார்.

இச்சம்பவத்திற்கான நோக்கத்தை தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும்  இதன் தொடர்பான  தகவல் உள்ள நபர்கள்  அருகிலுள்ள காவல் நிலையத்தை அல்லது விசாரணை அதிகாரி சார்ஜன் அகமது பைசால் ஹசானை 019-7691924 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவலாம் என்றும் நஸ்ரோன் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.