கோலாலம்பூர், அக் 28: தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் சிறைச்சாலை, மறுவாழ்வு மையம், சிறப்பு மறுவாழ்வு மையம், சிறப்பு தடுப்பு மையம் மற்றும் ஹென்றி கர்னி பள்ளி ஆகிய இடங்களில் உள்ளவர்களை அவர்களின் குடும்பங்கள் சந்திக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
காலை 8.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை கைதிகளை நேருக்கு நேர் சந்திக்க அனுமதிக்கப் படுவதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் வருகை அட்டையையும் எடுத்து வருமாறும் சிறைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளுக்கு வழங்க வருகையாளர்கள் உணவு மற்றும் பானங்களைக் கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக சிறைச்சாலை சிற்றுண்டியில் அவற்றை வாங்கலாம் மற்றும் அன்றைய தினம் இந்து சமயத்தை சார்ந்த கைதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மலேசிய சிறைத்துறை மூலம் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப் பட்டுள்ளதால், கைதிகளுக்கு பணம் வழங்க வருகையாளர்கள் ஊக்குவிக்கப் படுவதில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற குறிப்பிட்ட விஷயங்களுக்காக வருகையாளர் பணம் கொடுக்க விரும்பினால்,அதிகாரப்பூர்வ PPT 28 ரசீது பெறப்பட வேண்டும்.
"வருகையாளர்கள் சிறைச்சாலைச் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டவர்கள் ஆவர். அதனால், சிறை அதிகாரிகள் சிறைக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் முன் உடல் பரிசோதனை மேற்கொள்வர்" என அந்த அறிக்கை கூறுகிறது.
நேருக்கு நேர் சந்திக்க முடியாத குடும்பங்கள் நவம்பர் 4 முதல் 6 வரை இணைய சந்திப்பை மேற்கொள்ளலாம்.
– பெர்னாமா


