ஷா ஆலம், அக். 28 - இன்று இங்கு நடைபெற்ற சிறப்பு சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தை, வாய்ப்பு குறைந்தவர்களுக்கு குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட 4,600 வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
முதியவர்கள், பூர்வக் குடியினர், வறியவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஆகியோர் மற்றவர்களுடன் போட்டியிடாமல் வேலை தேடுவதை இந்த பிரத்தியேக வேலை வாய்ப்புச் சந்தை எளிதாக்கியுள்ளது என்று மந்திரி புசார் கூறினார்.
முதன் முறையாக நடத்தப்படும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு கொண்டுள்ளதாகக் கூறிய டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, முன்னாள் குற்றவாளிகள் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்குரிய வாய்ப்பினை இது ஏற்படுத்துகிறது என்றார்.
வேலை தேடும் போது அவர்கள் (வாய்ப்பு குறைந்த தரப்பினர்) செளகர்யமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறார்கள். மற்றவர்களுடன் போட்டியிட விரும்பவில்லை. (காரணம்), சில சமயங்களில் சாதாரண மக்களிடமிருந்து போட்டி இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
தாங்கள் புறக்கணிக்கபட்டதாக அவர்கள் உணர்வதைக் காண நாங்கள் விரும்பவில்லை. எனவே நாங்கள் இந்த திட்டத்தை ஏற்பாடு செய்து மாநிலத்தின் சேவைகளை மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்கிறோம் என்று அவர் சொன்னார்.
இன்று இங்கு நடைபெற்ற பிரத்தியேக வேலை வாய்ப்புச் சந்தையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இதற்கிடையில், இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் வழங்கப்படும் 70 சதவீதத்திற்கும் அதிகமான வேலைகள் 2,000 வெள்ளிக்கும் கூடுதலான சம்பளத்தை வழங்குவதோடு சிறந்த வாழ்க்கைக்கும் உத்தரவாதம் அளிக்கின்றன என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
இம்மாநிலத்தில் மட்டுமல்ல, சிலாங்கூருக்கு வெளியிலும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இது வாய்ப்பு குறைந்த தரப்பினருக்கு வேலை கிடைப்பதை எளிதாக்குகிறது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம் என்றார் அவர்.


