(ஆர்.ராஜா)
கோலாலம்பூர் அக் 28 - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காசே@ஹவானா உதவித் திட்டத்தின் கீழ் தொடர்பு துறை அமைச்சர் பாஹ்மி பாட்சில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த இராம சரஸ்வதி மற்றும் பத்துமலை ஆகியோருக்கு காசே அவானா நிதியுதவியை இன்று வழங்கினார்.
இரு வாரங்களுக்கு முன்னர் தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நி சிங் பத்தாங் பெர்ஜூந்தைக்கு நேரடி வருகை புரிந்து மலேசிய நண்பன் பணியாளர் லோகநாதனுக்கு காசே அவானா திட்டத்தின் கீழ் நிதியுதவியை வழங்கினார்.
இன்று அமைச்சர் பாமி பட்சில் நேரடியாக பத்துகேவ்ஸ் வட்டாரத்தில் உள்ள இராம சரஸ்வதி வீட்டிற்கு வருகை புரிந்தார். தமிழ் மலர் பத்திரிகையின் முன்னாள் நிருபருமான இராம சரஸ்வதி இப்போது உடல் நலம் குன்றி கண் பார்வை பாதிக்கப்பட்டு செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரின் உடல் நலத்தை விசாரித்த அமைச்சர் பாமி பாட்சில் விரைவில் குணம் அடையவும் பிரார்த்திப்பதாக கூறினார். பின்னர் காசே அவானா திட்டத்தின் கீழ் நிதியுதவியை அவரிடம் வழங்கினார்.
பிறகு பத்துகேவ்ஸ் தாமான் லெட்சுமணாவுக்கு விரைந்த அமைச்சர் பாஹ்மி பாட்சில் தமிழ் நேசன் முன்னாள் பணியாளர் பத்துமலையின் உடல் நலத்தை விசாரித்து நிதி உதவியை வழங்கினார்.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் செ.வே.முத்தமிழ்மன்னன், துணை தலைவர் காளிதாஸ், உதவித் தலைவர்கள் காளிதாசன் இளங்கோ, ரவி முனியாண்டி, செயலவை உறுப்பினர்கள் பவளச்செல்வன், காளிதாஸ் சுப்ரமணியம், ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
பெர்னாமா செய்தி நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி புவான் நூருல் மற்றும் அமைச்சர் பாஹ்மி பாட்சில் சிறப்பு அதிகாரி டத்தோ சிவபாலன் ஆகியோருடன் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் ஆலோசகர் டாக்டர் சத்யா பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோய் வாய்ப்பட்டிருக்கும் மற்றும் மூத்த பத்திரிகையாளர், பணியாளர்களுக்கு உதவும்படி மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் அண்மையில் தொடர்பு துறை அமைச்சுடன் முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தியது.
இதன் பலனாக இப்போது கட்டம் கட்டமாக மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.


