புத்ராஜெயா, அக். 28 - எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளியை முன்னிட்டு நாளை தொடங்கி நாட்டிலுள்ள முக்கிய
நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குக்கரை மாநிலங்களுக்குச்
செல்லும் நெடுஞ்சாலைகளை 26 லட்சத்து 20ஆயிரம் வாகனங்கள்
பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை
வாரியம் (எல்.எல்.எம்.) கூறியது.
இக்காலக்கட்டத்தில் பிளஸ் நெடுஞ்சாலையை 21 லட்சத்து 30 ஆயிரம்
வாகனங்களும் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையை 198,000
வாகனங்களும் கிழக்குக் கரை நெடுஞ்சாலை பிரிவு இரண்டை 59,220
வாகனங்களும் கிழக்கு கரை நெடுஞ்சாலையின் பிரிவு ஒன்றை 153,700
வாகனங்களும் பயன்படுத்தும் என்று எல்.எல்.எம். தலைமை இயக்குநர்
டத்தோ சஸாலி ஹருண் தெரிவித்தார்.
இக்காலக்கட்டத்தில் வாகனமோட்டிகள் பாதுகாப்பான மற்றும் சமூகமான
பயணத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யும்படி அனைத்து நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களையும் தாங்கள் பணித்துள்ளதாக அவர் சொன்னார். நாளை தொடங்கி எதிர்வரும் திங்கள்கிழமை வரை அவசர வேலைகள்
தவிர்த்து வேறு எந்த காரணத்திற்காவும் நெடுஞ்சாலைகளில்
வழித்தடங்களை மூடக்கூடாது என்ற உத்தரவும் நெடுஞ்சாலை ஒப்பந்த
நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆர்.அண்ட் ஆர். எனப்படும் நெடுஞ்சாலையின் ஓய்வுப் பகுதிகள்
நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில் கார் நிறுத்துமிடங்கள் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் தயார் செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
தீபாவளியை முன்னிட்டு நாளை நள்ளிரவு 12.01 மணி தொடங்கி மறுநாள்
புதன் கிழமை இரவு 11.59 மணி வரை இரு தினங்களுக்கு
நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண விலக்களிப்பு வழங்கப்படும் என
அரசாங்கம் அறிவித்துள்ளது.


