ஈப்போ, அக். 24- பள்ளி வளாகத்தில் 13 வயதுடைய மாணவியை மோதித்
தள்ளிவிட்டு தப்பிய காரோட்டி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் பந்தாய் ரெமிஸ், தாமான் பிந்தாங்கிலுள்ள தேசிய பள்ளியில்
நேற்று மாலை நிகழ்ந்தது.
வேலையில்லாதவரான அந்த 47 வயது நபர் மனநலப் பிரச்சனைக்காக ஸ்ரீ
மஞ்சோங் மருத்துவமனைக்கு சென்ற போது கைது செய்யப்பட்டதாக
மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்துல்
ரஹ்மான் கூறினார்.
ஆபத்தான முறையில் செலுத்தப்பட்ட பெரேடுவா மைவி கார் ஒன்று
பள்ளி மாணவியை மோதித் தள்ளியது தொடர்பில் நேற்று மாலை 6.24
மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார்.
மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த ஆடவர் ஒட்டிச்
சென்ற கார் பள்ளியின் கூடைப்பந்து திடலின் வேலிக் கதவை உடைத்துக்
கொண்டு உள்ளே நுழைந்துள்ளது. பின்னர் பள்ளி மண்டபத்தை நோக்கிச்
சென்ற அக்கார் திடலில் சக மாணவிகளுடன் கைப்பந்து பயிற்சியில்
ஈடுபட்டிருந்த மாணவி ஒருவரைத் மோதி விட்டு அங்கிருந்து
வெளியேறியது என்று அவர் தெரிவித்தார்.
இடது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அந்த மாணவி தற்போது ஸ்ரீ
மஞ்சோங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ஹஸ்புல்லா
அறிக்கை ஒன்றில் கூறினார்.
கொலை முயற்சி தொடர்பில் அந்த ஆடவருக்கு எதிராக குற்றவியல்
சட்டத்தின் 307வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று
அவர் மேலும் சொன்னார்.


