சிரம்பான், அக்.24: அஹ்மதி எனும் தவறான சமய போதனை இயக்கத்தைப் பின்பற்றுபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை அம்பாங்கனில் உள்ள ஒரு வீட்டில் நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய விவகாரத் துறை (ஜெயின்ஸ்) கைது செய்தது.
ஐம்பது முதல் 60 வயதுடைய தம்பதியர் மற்றும் 20 வயதிற்குட்பட்ட அவர்களது மகள் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர் என்று நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய விவகாரத் துறையின் அமலாக்கப் பிரிவுத் தலைவர் அகமது ஜாக்கி ஹம்சா கூறினார்.
நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்ற சோதனையில் ஷரியா சட்டத்திற்கு எதிரான போதனைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பல்வேறு ஆவணங்களை அமலாக்க குழுவினர் பறிமுதல் செய்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த மூன்று பேரும் சத்தியப்பிரமாணம் செய்ததற்கான ஆதாரங்களையும் நாங்கள் கண்டுபிடித்தோம். அந்த நபர் ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றவில்லை என்பதோடு கடந்த டிசம்பர் மாதம் நோன்பிருந்ததும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது என அவர் சொன்னார்.
அவர்கள் அனைவரும் சமூக ஊடகங்கள், குறிப்பாக யூடியூப் மூலம் போதனைகளை கற்று அதன் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


