கோலாலம்பூர், அக். 24- உலகின் மொத்த வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிக்ஸ் அமைப்பின் பங்காளி நாடாக மலேசியா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
அந்த அமைப்பின் பங்காளிகளாக அங்கீகரிக்கப்பட்ட 13 நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பதிமூன்று நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் முழு உறுப்பினராக இன்னும் ஆகாவிட்டாலும் அவை பங்காளி நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று அந்த கூட்டமைப்பின் பிரிக்ஸ் இன்போ எனும் எக்ஸ் தளம் கூறியது.
மலேசியா தவிர்த்து, அல்ஜீரியா, பெலாருஸ், கியூபா, இந்தோனேசியா, கஸகஸ்தான், பொலிவியா, நைஜீரியா, தாய்லாந்து, துருக்கி, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியட்னாம் ஆகிய நாடுகளும் பிரிக்ஸ் அமைப்பின் பங்காளி நாடுகளாக ஆகியுள்ளன.
பிரிக்ஸ் அமைப்பில் இணையும் விருப்பத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி பிரேசில் அதிபர் லுய்ஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் நடத்திய சந்திப்பின் போது வெளிப்படுத்தியிருந்தார்.
பிரிக்ஸ் அரசுகளுக்கிடையிலான அமைப்பில் இணைவதற்கு மலேசியா கடந்த ஜூலை 28ஆம் தேதி ரஷ்யாவிடம் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பம் செய்தது.
ரஷ்யா, பிரேசில், இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய அந்த அமைப்பின் தலைவர் பதவியை ரஷ்யா தற்போது வகித்து வருகிறது.
ஒத்துழைப்புக்கான ஒரு தளத்தை உருவாக்கும் நோக்கில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 2009ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கின. கடந்த 2010இல் தென்னாப்பிரிக்கா அந்த அமைப்பில் இணைந்தது.


