புது டில்லி, அக். 24- துருக்கியின் தலைநகரில் நேற்று நடத்தப்பட்ட
பயங்கவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் கண்டம்
தெரிவித்துள்ளதோடு அங்காராவுடன் ஒன்றுபட்டு நிற்பதற்கும்
உறுதியளித்துள்ளன.
துருக்கியின் விமானத் தயாரிப்பு மையமான துர்க்கிஸ் ஏரோஸ்பேஸ்
இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் மீது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்மணியை
உள்ளடக்கிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐவர்
கொல்லப்பட்டதோடு மேலும் 22 பேர் காயமடைந்தனர்.
அங்காராவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அதிர்ச்சியும்
கவலையும் அடைந்தோம். இந்த மோசமான செயலுக்கு நான் கடும்
கண்டனம் தெரிவிக்கிறேன். இறந்தவர்கள் குடும்பத்திற்கு அனுதாபம்
தெரிவிப்பதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய
பிரார்த்திக்கிறேன் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷாரிப் தனது
எக்ஸ் பதிவில் கூறினார்.
இந்த தாக்குதலை கோழைத்தனமானது என வர்ணித்த பாகிஸ்தான்
துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், துருக்கி
மக்களுடன் தாங்கள் ஒன்று பட்டு நிற்பதாகத் தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அஜர்பைசான், துருக்கிக்கு
ஆதரவாக தாங்கள் எப்போதும் இருந்து வருவதாகக் கூறியது. தாக்குதல்காரர்களை விரைந்து வீழ்த்திய துருக்கிய பாதுகாப்பு படைக்கு சோமாலியா பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டது.
இந்த கோழைத்தனமான தாக்குதல் துருக்கிக்கு எதிரானது மட்டுமல்ல.
மாறாக உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எதிரானது. இதே போன்ற
சவால்களை கடந்த காலங்களில் எதிர்நோக்கிய சோமாலியா துருக்கிக்கு
தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது என்று அந்நாட்டு
வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் துருக்கிக்கு தாங்கள்
தொடர்ந்து ஆதரவளித்து வரப்போவதாகக் கட்டார் கூறியது.


