சைபர் ஜெயா அக் 24: 2021 ஆம் ஆண்டு மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட

சிலாங்கூர் மனநலம் (சிஹாட்) திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 1,400க்கும்

மேற்பட்ட நபர்கள் ஆலோசனை சேவைகள் மற்றும் சிகிச்சை மூலம் பலன்

பெறுகின்றனர்.

பெரும்பாலான கவனிப்புகள்  20 முதல் 40 வயதுக்குட்பட்ட தனிநபர்களை

உள்ளடக்கியது, குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள இளம் குடும்பங்கள்

பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்கின்றன என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

டாக்டர் முகமட் அடில் சைனல் கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கின் தற்போதைய வாழ்க்கை மற்றும் பொருளாதார

சவால்களுக்கு மேலதிகமாக, நாங்கள் எதிர்கொள்ளும் 55 சதவீத பிரச்சனைகள்

குடும்ப உறவுகளுடன் தொடர்புடையவை என்று அவர் கூறினார்.

சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தில் பொது சுகாதார மாநாட்டில் குழு உறுப்பினராக

அழைக்கப்பட்ட போது அவர் இவ்வாறு கூறினார். இவ் விழாவிக்கு சுகாதார

ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடினும் வருகை புரிந்திருந்தார்.

சிஹாட் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 18 மனநல மருத்துவர்கள், நான்கு உளவியல்

கிளினிக்குகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் உள்ளனர் என்று டாக்டர்

முகமட் அடில் லும் கூறினார்.

இருப்பினும்,சிஹாட் திட்டம் தடைகளை எதிர்கொள்கிறது, குறிப்பாக

ஆலோசகர்கள் பற்றாக்குறை, சில மாவட்டங்களில் ஓர் ஆலோசகர் மட்டுமே

இருக்கிறார்.

"இச்சேவையை மேம்படுத்துவதற்கு முன்பு இருந்த RM250,000 உடன் ஒப்பிடும்போது

கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர்

கூறினார்.

கோவிட்-19 தொற்று நோய்க்குப் பிறகு அதிகரித்துவரும் மனநலப் பிரச்சனைகளைக்

கையாள்வதற்காக மாநில அரசு 500,000 ரிங்கிட் ஒதுக்கீட்டில் சிஹாட் திட்டத்தை

அறிமுகப்படுத்தியது.