கோலாலம்பூர், அக். 24- இவ்வாண்டு ஜனவரி முதல் இம்மாதம்
வரையிலான காலக்கட்டத்தில் ஓடுபாதையிலிருந்து மேலேழும்புவதற்கு
முன்னரே மீண்டும் விமான நிறுத்துமிடத்திற்கு திரும்பும்படி
உத்தரவிடப்பட்ட (ஆர்.டி.சி.) 181 சம்பவங்களை மலேசியன் ஏர்லைன்ஸ்
விமான நிறுவனம் (மாஸ்) பதிவு செய்துள்ளது.
அதே சமயம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வானில் பறக்கும்
போது மீண்டும் அதே விமான நிலையத்திற்கு திரும்பும்படி உத்தரவு
பிறப்பிக்கப்பட்ட (ஏ.டி.பி.) 18 சம்பவங்கள் அதே காலக்கட்டத்தில்
பதிவாகியுள்ளன. கடந்தாண்டு இந்த விமான நிறுவனத்தை உட்படுத்திய
248 ஆர்.டி.சி. சம்பவங்களும் 13 ஏ.டி.பி. சம்பவங்களும் பதிவாகியிருந்தன
என்பது குறிப்பிடத்தக்கது.
இயந்திரக் கோளாறு, தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் உடல் நலம்
சம்பந்தப்பட்ட அவசர சூழல் போன்ற அசாதாரண தருணங்களில்
இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு
கூறியது.
மக்களவையில் நேற்று செத்தியூ தொகுதி பெரிக்கத்தான் நேஷனல்
உறுப்பினர் ஷஹாரிஜூல்கர்னாய்ன் அப்துல் காடீர் எழுப்பிய கேள்விக்கு
வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சு இதனைத் தெரிவித்தது.
மாஸ் விமானங்களைப் பராமரிப்பதற்கான போக்குவரத்து அமைச்சின்
வியூகம் மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணம்
குறித்து ஷஹாரிஜூல்கர்னாய்ன் கேள்வியெழுப்பியிருந்தார்.
கடந்த ஜூன் மாதம் 24 முதல் 28 வரை மலேசியன் ஏர்போர்ட்ஸ்
பெர்ஹாட் (எம்ஏபி.) மற்றும் அந்த நிறுவனத்தின் விமானங்களை
பழுதுபார்க்கும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள எம்ஏபி இஞ்சினியரிங்
செர்விசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக மலேசிய பொது வான் போக்குவரத்து ஆணையம் திடீர் சோதனையை மேற்கொண்டதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.
இயந்திர உபரிபாகங்களில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் விமானத்தை
பராமரிப்பதற்கு தேவையான அளவு திறன் பெற்றத் தொழிலாளர்கள்
இல்லாதது ஆகியவை மாஸ் விமானங்களில் தொழில்நுட்ப பிரச்சனை
ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது கண்டறியப்பட்டது என்று அது
தெரிவித்தது.








