அங்காரா, அக் 24 - அங்காராவிற்கு அருகிலுள்ள துருக்கிய விமானத் தொழிலியல் மையமான ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைமையகத்தில் நேற்று பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டதாக துருக்கிய அரசாங்கம் கூறியது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட இரு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்ட வேளையில் 22 பேர் காயமுற்றதாக அனாடோலு ஏஜென்சி கூறியது.
துப்பாக்கிச் சூடு மற்றும் பலத்த வெடிப்புச் சத்தங்களுக்கு மத்தியில் பல ஆயுதமேந்திய தாக்குதல்காரர்கள் கட்டிடத்திற்குள் நுழைவதைச் சித்தரிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
அங்காராவின் கஹ்ராமன்காசானில் உள்ள துசாஸ் தொழில் துறை பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, ஐவர் உயிரிழந்தனர். அதில் 22 பேர் காயமடைந்தனர் என்று உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா எக்ஸ் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு நிகழ்ந்த குண்டு வெடிப்பு மற்றும் அடுத்தடுத்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமும் குற்றவாளிகள் யார் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. அங்கு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கட்டிடத்திற்குள் பணயக்கைதிகள் இருந்ததாகவும் சில ஊடக அறிக்கைகள் கூறின. எனினும், இதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
கட்டிடத்திற்குள் இருந்த ஊழியர்களை அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் யாரும் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர். ஊழியர்கள் அன்றைய தினம் வேலையை முடிந்து புறப்படும் சமயத்தில் வெவ்வேறு வெளியேறும் வழிகளில் குண்டுவெடிப்புகள் நடந்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் அனுப்பப்பட்டதாக அரசுக்கு சொந்தமான அனாடோலு ஏஜென்சி கூறியது. இந்த தாக்குதல் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
துருக்கியின் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் விமான நிறுவனங்களில் துசாஸ் ஒன்றாகும். இது மற்ற திட்டங்களுக்கிடையில் நாட்டின் முதல் தேசிய போர் விமானமான கான ரக விமானத்தை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது.


