சைபர்ஜெயா, அக். 23- நாட்டில் சுகாதாரத் துறை தற்போது எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்கும் முயற்சியாக நோய்த் தடுப்பை இலக்ககாக் கொண்ட சுகாதார திட்டங்களை விரிவுபடுத்த சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.
சுகாதாரப் பாதுகாப்பின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக முன்கூட்டியே கண்டறிதல் மூலம் சமூகத்தை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார் .
ஆரம்பகால நோய் தடுப்பு நடவடிக்கையின் மூலம் உயிர்களை காப்பாற்றும் அதேவேளையில் மருத்துவமனைகள் மற்றும் பொது கிளினிக்குகள் எதிர்கொள்ளும் அழுத்தம் மற்றும் சுமையையும் குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பொது சுகாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மாநில சிலாங்கூர் மாநில அரசின் துணைச் செயலாளர் (மேம்பாடு) டத்தோ ஜோஹாரி அனுவாரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதற்கிடையில், தற்போதுள்ள முன்னெடுப்புகளை மேம்படுத்துவதற்காகவும் சுகாதாரத்திற்கான புதிய பரிந்துரைகளை ஆராய்வதற்காகவும் இந்த மாநாடு இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடத்தப்படுகிறது என்று ஜமாலியா கூறினார்.
நாட்டின் சுகாதார அமைப்பு நிலையானதாகவும் வலுவுடனும் இருப்பதை உறுதி செய்வதில் மருத்துவ மாணவர்கள் உட்பட அனைத்து பங்களிப்பாளர்களும் உரிய பங்கினை ஆற்றுவார்கள் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


