(ஆர்.ராஜா)
கிள்ளான், நவ.23 - அதிக மக்கள் தொகை கொண்ட பரபரப்பான குடியிருப்பு பகுதியாக விளங்கி வரும் தாமான செந்தோசா இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் நகர அந்தஸ்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குடியிருப்புப் பகுதியை பண்டார் செந்தோசாவாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு கிள்ளான் அரச மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ நோராய்னி ரோஸ்லான் தலைமையில் விரைவில் நடைபெறும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் கூறினார்.
டத்தோ பண்டாரிடமிருந்து தேதி கிடைத்தவுடன் இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்த நிகழ்வு தாமான் செந்தோசாவில் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மொத்தம் 25 வீடமைப்பு பகுதிகளைக் கொண்ட தாமான் செந்தோசா நகர அந்தஸ்தை அடைந்தவுடன் இங்குள்ள மக்களின் மனநிலையும் சிந்தனையும் மாறும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நேற்று புக்கிட் திங்கியிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் நடைபெற்ற செந்தோசா தொகுதி
ஆலயப் பொறுப்பாளர்களுடனான தீபாவளி விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தாமான் செந்தோசா நகர அந்தஸ்தைப் பெற்றவுடன் இதன் தோற்றமும் அடையாளமும் மாற்றம் காணும் என்பதோடு வீடுகளின் விலை உயரும் என குணராஜ் குறிப்பிட்டார்.
அதே சமயம், இங்கு நிலவும் வெள்ளப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் இயலும் என்றார் அவர்.
தாமான் செந்தோசா எப்போதும் சுத்தமாகவும் பசுமையாகவும் இருப்பதை உறுதி செய்வதில் குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.
30,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசிக்கும் தாமான் செந்தோசாவுக்கு நகர அந்தஸ்தை ஏற்படுத்தித தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குணராஜ் முன்னதாகக் கூறியிருந்தார்.


