ஷா ஆலம், அக் 23 - நகைக்கடையில் சேவை திருப்திகரமாக இல்லாத காரணத்தால் ஆடவர் ஒருவர் கடந்த வியாழன் (அக்டோபர் 17) இங்குள்ள செக்சன் 14 இல் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் தனது செல்ல நாயை கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட அச்சம்பவம் நேற்று முன்தினம் காலை காலை 11.20 மணியளவில் நிகழ்ந்தது. அந்த சம்பவத்தில் 52 வயதான சந்தேக நபர் தனது நாயை கட்டிடத்திற்கு வெளியே கட்டி வைத்து விட்டு நகை வாங்க நகைக் கடைக்குச் சென்றது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் கூறினார்.
சேவை திருப்திகரமாக இல்லாததால் கோபமடைந்த சந்தேக நபர், நகைக்கடை ஊழியர்களை தகாக வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் வணிக வளாகத்தின் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் அந்த ஆடவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.
அதன் பின்னர் அந்த நபர் தனது செல்ல நாயை கட்டிடத்திற்குள் கொண்டு வர முயன்றார். எனினும், அந்த முயற்சி நிறுத்தப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 290, 1955ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் 14வது பிரிவு மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று இக்பால் மேலும் கூறினார்.
அதே சமயம், அந்த ஆடவர் குற்றவியல் சட்டத்தின் 233 வது பிரிவின் கீழ் ஒரு போலீஸ் புகாரையும் செய்துள்ளதாக அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நோர் சப்ரினா முகமது தாஹாவை 014-5130450 என்ற எண்ணிலும் உதவி புலனாய்வாளர் சார்ஜன் ருஸ்தாம் எலியாவை 019-6148034 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


