புத்ராஜெயா, அக் 21: அக் 6 முதல் அக்டோபர் 12 வரையிலான 41வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME28) டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தோடு (1,639) ஒப்பிடும்போது 1,624ஆக குறைந்துள்ளது. அதே சமயம் ஓர் இறப்பும் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 94,181 டிங்கி சம்பவங்கள் பதிவான நிலையில்
இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 106,773ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர்
ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.
இவ்வாண்டு 96 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2023 இல் 67 இறப்புகள்
மட்டுமே பதிவாகி இருந்தன என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், தொற்றுநோயியல் 41வது வாரத்தில் 38 ஹாட்ஸ்பாட் இடங்கள்
பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.
அதாவது சிலாங்கூரில் 22 இடங்களும், நெகிரி செம்பிலானில் 5 இடங்களும், பினாங்கில் 4 இடங்களும், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூரில் 2 இடங்களும், சபாவில் 2 இடங்களும், பகாங், பேராக், கெடாவில் தலா ஓர் இடமும் பதிவாகியுள்ளன.
– பெர்னாமா


