பட்டர்வொர்த், அக். 21- வடகிழக்கு பருவமழை காலத்தில் மக்களின்
தேவையை ஈடு செய்வதற்கு போதுமான அளவு உணவு கையிருப்பு
உள்ளதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர்
டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக இவ்வாண்டில் மழைப் பொழிவு
அதிகமாக இருக்கும் என எதிபார்க்கப்படும் நிலையில் நிச்சயமற்ற
வானிலையை எதிர்கொள்வதில் கடந்த காலங்களில் கிடைத்த
அனுபவத்தைக் கொண்ட தாங்கள் உரிய முன்னேற்பாடுகளைச் செய்து
விட்டதாக அவர் சொன்னார்.
கடந்த காலங்களில் போதுமான அளவு உணவுக் கையிருப்பை தயார்
செய்த அனுபவம் நமக்கு உள்ளது என்று இங்குள்ள பாகான் டாலாம்
படகுத் துறையில் துனா மீன்கள் கரைக்கு கொண்டு வரப்படும் நிகழ்வைப்
பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
நடப்பு உணவுக் கையிருப்பின் அடிப்படையில் விலைகளில் ஏற்ற இறக்கம்
காணப்பட்டாலும் மக்களுக்கு போதுமான அளவு உணவு விநியோகம்
உள்ளதை அரசாங்கம் எல்லாச் சூழ்நிலைகளிலும் உறுதி செய்யும் என
அவர் சொன்னார்.
முன்னதாக அவர், உள்நாட்டு நிறுவனமான அல்பா ஓஷியன் ரிசோர்சஸ்
பெர்ஹாட் பிடித்த 75 டன் துனா மீன்கள் கரைக்கு கொண்டு வரப்படும்
நிகழ்வை முகமது சாபு பார்வையிட்டார்.
இந்நிறுவனம் ஆண்டுக்கு மூன்று முறை இந்த துனா வகை மீன்களைப்
பிடிக்கிறது. இவ்வாண்டிற்கான இறுதி மீன்பிடி நடவடிக்கை இதுவாகும்.
இந்த மீன்கள் ஜப்பான் சிங்கப்பூர் வியட்னாம், தாய்லாந்து, அமெரிக்கா
போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


