கோம்பாக், அக். 21- பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட்
நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் வசதி குறைந்த தரப்பினருக்கு
6,035 அத்தியாவசிய உணவுப் பொருள் பொட்டலங்களை வழங்கியுள்ளது.
“பாக்ஸ் ஆப் ஹோப்“ எனும் இந்த உதவித் திட்டம் நிறுவன சமூக
பொறுப்புணர்வின் (சி.எஸ்.ஆர்.) அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக
ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி
ஆடாம் சுபியான் கசாலி கூறினார்.
இந்த “பாக்ஸ் ஆப் ஹோப்“ திட்டம் கடந்த 2020 ஆண்டு கோவிட்-19
பெருந்தொற்று பரவலின் போது தொடங்கப்பட்டது. இது எங்களின் நிறுவன
சமூக பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக விளங்குகிறது என்று அவர்
சொன்னார்.
சமூகத்திற்கு உதவி வழங்கும் அதேவேளையில் சமூகத்தின் பல்வேறு
தரப்பினருடன் உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாக் கொண்ட இந்த
திட்டம் தொடக்கத்தில் “செசாமா மாரா“ அதாவது இணைந்து
முன்னேறுவோம் எனும் பெயரில் தொடங்கப்பட்டது என அவர்
குறிப்பிட்டார்.
இங்குள்ள பத்துகேவ்ஸ் டேவான் ராக்யாட் மண்டபத்தில் ஏற்பாடு
செய்யப்பட்ட பத்து சுங்கை துவா தொகுதியுடனான ஆயர் சிலாங்கூர்
நிறுவனத்தின் 5ஆம் ஆண்டு நிறைவு விழா விழாவில் உரையாற்றிய
போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். மாநில அரசின் துணைச்
செயலாளர் (மேம்பாடு) டத்தோ ஜோஹாரி அனுவாரும் இந்நிகழ்வில்
கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அடங்கிய 300
பொட்டலங்கள் சுங்கை துவா தொகுதியிலுள்ள வசதி குறைந்தவர்கள்
மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக நல இல்லங்களுக்கு வழங்கப்பட்டன.


